

சித்தராமையா அருகில் டி.கே.சிவகுமார்
பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், டெல்லியில் கூட்டத்தில் சித்தராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு வருமாறு சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இருவரும் டெல்லிக்கு சென்றனர்.
நேற்று மாலையில் டெல்லியில் உள்ள இந்திரா பவனில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கூறும்போது, "முதல்வர் பதவியை விட்டுத் தருவது குறித்து சித்தராமையாவிடம் விவாதிக்கப்பட்டது. அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் அவரிடம் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அது குறித்து அவர் யோசித்து முடிவெடுப்பதாக கூறிவிட்டார்.
இதையடுத்து டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு கூடுதல் முக்கியத்துவமும், அமைச்சரவை மாற்றத்தில் அவரது ஆதரவாளருக்கு முக்கிய துறைகள் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இன்னொருபுறம் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்கலாமா ? எனவும் விவாதிக்கப்பட்டது" என்றனர்.
இந்நிலையில் இன்றோ அல்லது நாளையோ முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவார் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.