

மும்பை: ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ள மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தலை இணைந்து எதிர்கொள்ளப் போவதாக சிவ சேனா (உத்தவ் தாக்கரே), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டாக அறிவித்துள்ளன.
மகாராஷ்டிராவின் முக்கிய மாநில கட்சிகளாக சிவ சேனா (யுபிடி), மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை விளங்கி வருகின்றன. உத்தவ் தாக்கரேவுக்கும் ராஜ் தாக்கரேவுக்கும் இடையே இருந்த பகை காரணமாக இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டு வந்தன.
இந்நிலையில், வரக்கூடிய மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தலை கூட்டணி அமைத்து எதிர்கொள்வது என இவ்விரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பு மும்பையில் இன்று வெளியிடப்பட்டது. மும்பையில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தாக்கரே, ‘‘இன்று நாங்கள் எங்கள் இருவருக்கும் இடையேயான கூட்டணியை அறிவிக்கிறோம். தேர்தலை இணைந்து எதிர்கொள்வோம். மும்பை மேயர் ஒரு மராத்தியராக இருப்பார். அவர் எங்கள் கட்சிகள் இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பார். மேலும், நாங்கள் சரத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே பேசும்போது, ‘‘நாங்கள் ஒன்றாக இருப்பதற்காக இணைந்துள்ளோம். மும்பையை அபகரிக்க நினைப்பவர்களை நாங்கள் ஒழித்துக் கட்டுவோம். மராத்தி மக்களிடம் நான் சொல்ல விரும்புவது, நீங்கள் இப்போது பிரிந்து சென்றால், நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள். பாஜகவில் நடப்பதைப் பார்க்க சகிக்க முடியாதவர்களும் எங்களுடன் வரலாம்’’ என்று தெரிவித்தார்.
இந்த கூட்டணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது என சிவ சேனா (யுபிடி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ‘‘இந்த நாள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இது தாக்கரேக்களின் தலைமைக்கு வழிவகுக்கும். அவர்களால் மட்டுமே மாநிலத்தை வழிநடத்த முடியும்’’ என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.