

புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டில் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் அவர் டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தனியார் நிறுவனம் சார்பில் ஷேக் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
செய்தியாளர் சந்திப்பின்போது ஹசீனா கூறும் எந்தக் கருத்தையும் மத்திய அரசு ஆமோதிக்காது. டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 90 பேர் உயிரிழப்பு: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தான் எல்லையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன தயாரிப்பு கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.