

புதுடெல்லி: பதினெட்டு வயது நிரம்பாத மனைவியுடனான உறவு போக்சோ சட்டப்படி குற்றம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
டெல்லியில் 16 வயது சிறுமிக்கு 28 வயது இளைஞருடன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு அவர்கள் ஒன்றாக வாழத் தொடங்கி அந்த சிறுமி கர்ப்பமானார். கர்ப்ப காலத்தில் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, 18 வயது நிரம்புவதற்கு முன்பே சிறுமிக்கு திருமணமாகி அவர் கர்ப்பமானது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் கணவர் மீது போக்சோ வழக்குப் பதிவானது.
இதை ரத்துசெய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தம்பதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் திருமணம் செய்துகொள்ளத் தகுதியானவர் என்று அந்த தம்பதியினர் வாதிட்டனர். திருமணம் செல்லுபடியாகும் என்பதால், திருமணத்துக்குப் பிறகான பாலியல் உறவு குற்றவியல் ரீதியாகத் தண்டிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.
இதனிடையே, துரதிர்ஷ்டவசமாக, கடந்த ஜூன் மாதம், அந்த சிறுமி இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனது திருமணம் சொந்த விருப்பத்தின் பேரிலும், இரு குடும்பங்களின் சம்மதத்துடனும் நடைபெற்றது. எந்தவிதமான கட்டாயத்துக்கோ அல்லது அழுத்தத்துக்கோ நான் ஆளாக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நரூலா கடந்த 23-ம் தேதி ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பை வழங்கினார். அதில், ‘முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் திருமணத்தை மேற்கோள் காட்டி, 18 வயது நிரம்பாத மனைவியுடனான பாலியல் உறவு வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது.
சிறுமிக்கு 18 வயதுக்குக் குறைவாக இருந்தால், அவர் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் மனைவியாக இருந்தாலும், அவருடன் உடல் உறவு கொள்வது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும்.
மேலும், முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் ஒரு திருமணம் செல்லுபடியாவது மட்டுமே, அதைத் தொடர்ந்த பாலியல் உறவுகளின் குற்றத்தன்மையை நீக்கிவிடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில், போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (பிஎன்எஸ்) கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சட்டப் பாதுகாப்புகளே முதன்மையானவை.
சட்டத்தின் பார்வையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் சிறுமி ஆவார். எனவே சிறுமியின் சம்மதம் கூட பாலியல் உறவைச் சட்டப்பூர்வமாக்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.