

நாசிக் / மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் கிளையில் ‘அசோசியேட்' பணியில் சேர்ந்த அந்தப் பெண், காவல் துறையிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்குத் திருமணமாகி சில காலமே ஆன நிலையில், பணியிடத்தில் சக ஊழியர்கள் என்னை ஜீரோ ஃபிகர் என உருவக்கேலி செய்தும், இந்து தெய்வங்களைப் பற்றி அவதூறாகப் பேசியும் துன்புறுத்தினர். எனது கணவர் புனேவில் பணிபுரிவதால், நான் மாமனார் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தேன்.
பயிற்சிக் காலத்தின்போது, இதர பிரிவில் பணிபுரிந்த ரசா மேனன் என்பவர், அடிக்கடி என்னிடம் வந்து தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆபாசமாகப் பேசுவார். உன் கணவர் தள்ளி இருக்கிறார், உனக்குப் பயமாக இல்லையா? என்ன உதவி என்றாலும் என்னை அணுகு என்று கூறித் தொல்லை கொடுப்பார்.
கடந்த மார்ச் மாதம் குடிபட்வா பண்டிகையின்போது, நான் புடவை அணிந்து வந்திருந்தேன். அப்போது சிற்றுண்டி அறை அருகே சென்றபோது, ரசா மேனன் எனது புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்தார். நான் அதிர்ச்சியடைந்து அவரைப் பார்த்தபோது, வக்கிரமான பார்வையுடன் அவர் சிரித்தார்.
மேலும், ஆசிப் அன்சாரி என்ற மற்றொரு ஊழியர், இருக்கைகள் காலியாக இருந்தும் வேண்டும் என்றே அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, கை, தொடை மற்றும் தோள்பட்டையில் தகாத முறையில் தொடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு முன்பு உனக்குக் காதலர்கள் இருந்திருப்பார்கள், இப்போது அதுபோல ஒருவனை வைத்துக்கொண்டால் என்ன ? என்று ஆபாசமாகப் பேசியதுடன், மதமாற்ற முயற்சியிலும் ஈடுபட்டார். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நாசிக் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், ஒரு பெண் மேலாளர் உட்பட 8 பேரைக் கைது செய்துள்ளனர்.