

பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி
நந்திகிராம்: மேற்கு வங்க பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமில் இருந்து சுமார் 30,000 புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் உள்ளனர்.
குறிப்பாக, குஜராத்தில் 1,100 பேரும், ஒடிசாவில் 800 பேரும், மகாராஷ்டிரத்தில் 3,300 பேரும் தங்கிப் பணிபுரிகின்றனர். இவர்கள் பணியாற்றும் ஒடிசா, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் யாருடைய ஆட்சி நடக்கிறது ? பாஜகவின் ஆட்சிதான்! எனவே, வாக்களிப்பதில் தவறு செய்துவிடாதீர்கள். உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.
அப்போதுதான் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-க்குப் பிறகு உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. நீங்கள் மிரட்டும் தொனியில் ‘ஜெய் பங்களா’ முழக்கங்களை எழுப்பலாம், ஆனால் நான் அனைத்தையும் குறித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இவ்வாறு சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.
திரிணமூல் கண்டனம்: இது குறித்து நந்திகிராம் தொகுதி திரிணமூல் வேட்பாளர் பவித்ரா கர் கூறுகையில், “மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுப்பதே சுவேந்து அதிகாரியின் அரசியலாக உள்ளது. ஒரு மக்கள் பிரதிநிதியாகத் தொகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவரே, அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறார். இதற்கு நந்திகிராம் மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தலில் உரிய பதிலடியை கொடுப்பார்கள்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.