உ.பி.யில் ரூ.4,000 கோடியில் அமைகிறது செமி கண்டக்டர் தொழில் பூங்கா - 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பு

உ.பி.யில் ரூ.4,000 கோடியில் அமைகிறது செமி கண்டக்டர் தொழில் பூங்கா - 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பு
Updated on
1 min read

புது டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) தொழில் பூங்கா 48 ஏக்கரில் அமைகிறது. ரூ.4,000 கோடி முதலீட்டிலான இத்திட்டம் 3,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஐ.டி நகரமாக அமைந்திருப்பது டெல்லியை ஒட்டியுள்ள நொய்டா. இதன் விரிவாக்கமான கிரேட்டர் நொய்டாவில் 48 ஏக்கரில் குறைக்கடத்தி தொழில் பூங்கா அமைய உள்ளது. இங்கு செய்யப்படும் ரூ.4,000 கோடி முதலீட்டால் உ.பி.யின் பொருளாதார வளர்ச்சியும் கூடிவிடும் வாய்ப்புகள் உள்ளன.

இதுபோல் குறைகடத்தி தொழிலுக்கான சிறப்பு பூங்கா வட இந்தியாவில் முதன்முறையாக உ.பி.யில் அமைகிறது. இதன்மூலம், உ.பி மாநிலம் வளர்ச்சியை நோக்கி மற்றொரு படியை எடுத்து வைப்பதாகக் கருதப்படுகிறது. இந்தத் தொழில் பூங்காவில் பல தனித்துவமான அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன.

பூங்காவின் முழு திட்டமும் சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பளவில் உருவாக்கப்படுகிறது. இப்பூங்கா அமைக்கும் பணி நிறைவடைந்த பிறகு, இந்தியா குறைக்கடத்தி துறையில் தன்னிறைவை நோக்கி மற்றொரு படியில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சிப் பிரைவேட் லிமிடெட்டின் குறைக்கடத்தி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று செக்டர் 28-ல் நடைபெறுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த குறைக்கடத்தி சிறப்பு தொழில் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்காக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வருகை தருகிறார். இந்த தொழில் பூங்கா, பிரபல ஐடி நிறுவனமான எச்சிஎல் குழுமம் மற்றும் உலகின் முன்னணி மின்னணு நிறுவனமான பாக்ஸ்கான் இணைந்து கூட்டு முயற்சியாக அமைகின்றன.

இந்தப் பூங்கா திட்டம், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ரூ.45,000 கோடி பங்களிக்க உள்ளது. இந்த குறைக்கடத்தி அலகுகள் பூங்காவினுள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான டிஸ்ப்ளே, டிரைவர் சில்லுகள் என மாதத்துக்கு 20 ஆயிரம் வேஃபர்கள் திறனுடன் தயாரிக்கப்பட உள்ளன.

இப்பூங்கா, கிரேட்டர் நொய்டாவின் புதிய ஜேவர் விமான நிலையத்துக்கு அருகில் அமைகிறது. எனவே, இது சர்வதேச தளவாடங்கள், மல்டி மாடல் இணைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும். இதன் மூலம், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 3,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

உ.பி.யில் ரூ.4,000 கோடியில் அமைகிறது செமி கண்டக்டர் தொழில் பூங்கா - 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு எதிர்பார்ப்பு
“திமுக - தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி” - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in