

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான பிரியங்கா காந்தியின் தனிச்செயலாளர் டி.எஸ்.ராஜ்குமார். இவரது பெயரையும், அடையாளத்தையும் தவறாகப் பயன்படுத்தி, எலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வித்யா பாலகிருஷ்ணன், எம்.பி.க்கள் ஷாஃபி பரம்பில், டீன் குரிய கோஸ் ஆகியோரைத் தொடர்பு கொண்ட மோசடி ஆசாமி, பிரியங்கா காந்தியின் அலுவலகப் பெயரைப் பயன்படுத்திப் பணம் கேட்டுமிரட்டியுள்ளார்.
இதையடுத்து, கேரள காவல் துறைத் தலைவரிடமும், வயநாடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடமும் பிரியங்காவின் தனிச் செயலாளர் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஆள் மாறாட்டம் செய்த அந்த நபர் மீது வயநாடு சைபர் கிரைம் போலீஸார் புதன் கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட எலத்தூர் தொகுதி பெண் எம்எல்ஏ வித்யா பாலகிருஷ்ணன் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: ஜூலை 6ம் தேதி மதியம் எம்எல்ஏ வித்யா பால கிருஷ்ணனுக்கு வாட்ஸ்அப் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தியின் அலுவலக அதிகாரி ராஜ் குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
கேரளாவில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், ரூ.3 கோடி பணம் கொடுத்தால் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரியங்கா காந்தியின் டெல்லி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அது போலி அழைப்பு என்பது உறுதியானது.
இது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த போலி அழைப்பு டெல்லியில் இருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர்.