

புதுடெல்லி: சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதிக்க அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அதேநேரம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கருத்து வேறுபாடுகள் இருந்தால் மாநில அரசுடன் பேசித் தீர்க்க வேண்டும். முடிவெடுக்காமல் மசோதாக்களை நீண்டகாலம் நிறுத்தி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விளக்கம் அளித்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் 10 நாட்கள் விசாரித்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆகியோர் வாதிட்டனர்.
அனைத்துத் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகள் மீதான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று விளக்கம்அளித்துள்ளது.
அதன் விவரம்: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் அல்லது மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துசட்டப்பேரவைக்கு கருத்துகளுடன் திருப்பி அனுப்ப வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தில் இந்த 3 வாய்ப்புகள் மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆளுநர் பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். இருப்பினும், அவர் தன் விருப்புரிமை அடிப்படையில் செயல்படவும் அரசமைப்புச் சட்டம் அதிகாரம் தந்துள்ளது. இதன்படி, மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் அல்லது கருத்துகளுடன் பேரவைக்கு திருப்பி அனுப்பலாம்.
விசாரணைக்கு உட்பட்டவர்தான்மசோதாக்கள் மீது ஆளுநர் எடுக்கும் முடிவுகளை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. உரிமையியல் வழக்கு தொடர விலக்கு அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவை, மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு முகாந்திரமாகக் கொள்ள முடியாது.
ஆளுநர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசமைப்புச் சட்டம் விலக்குரிமை அளித்திருந்தாலும், அவர் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவர்தான். ஆளுநரை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது, குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர, அரசமைப்புச் சட்டத்தில்காலக் கெடு விதிக்காதபோது, தமிழ்நாடு வழக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநர்களுக்கு காலக் கெடு விதித்தது பொருத்தமாக இல்லை.இதுபோல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரப்படவில்லை.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் குடியரசுத் தலைவரின் விருப்பமே போதுமானது. இருப்பினும், மசோதா குறித்த தெளிவற்ற நிலை இருந்தாலோ, உச்ச நீதிமன்ற ஆலோசனை தேவை என்ற பட்சத்திலோ விளக்கம் கேட்டுப் பெறலாம்.
மசோதா சட்டமாகும் முன்னரே, அதுகுறித்த ஆளுநர்களின் அல்லது குடியரசுத் தலைவரின் முடிவுகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியாது. மசோதா சட்டமாகும் முன்பு, அதன் சாராம்சங்களை நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது.
‘ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள், உச்ச நீதிமன்றம் சிறப்புஅதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததாக கருதப்படும்’ என்று உத்தரவிட முடியாது. இவ்வாறு, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று அளிக்கப்படும் தீர்ப்பு, நிர்வாகப் பணிகளை நீதித்துறை எடுத்துக் கொள்வதாகிவிடும் என்பதால் அனுமதிக்க முடியாது.
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசின் மசோதா சட்டமாகாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநரின் பணியை வேறு எந்த ஒரு அமைப்பும் பறிக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுதான் விசாரிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்கவில்லை.
அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட முடியுமா என்ற கேள்விக்கு, ‘உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் பரந்துபட்டது. இதற்கான பதில் 10-வது கேள்வியில் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் இடையிலான பிரச்சினையை மூல வழக்கின்றி வேறு வகையில் தீர்க்க உச்ச நீதிமன்றத்தை அரசமைப்புச் சட்டம் தடுக்கிறது என்ற கேள்வி பொருத்தமற்றது என்பதால் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.