

புதுடெல்லி: ஐந்து கிலோ சிலிண்டர் விற்பனை சீராகத் தொடர்வதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
ஈரான் போரால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் காஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் 17.83 லட்சத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை சீராகத் தொடர்கிறது.
17.83 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ சிலிண்டர்கள் கடந்த ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேற்று, நாடு முழுவதும் 81,000-க்கும் அதிகமான 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. அதனால், மக்கள் பீதியடைந்து பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
வதந்திகளை நம்ப வேண்டாம்: வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான தகவல் களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பார்க்க வேண்டும்.
எல்பிஜி நுகர்வோர் டிஜிட்டல் முன்பதிவு தளங்களைப் பயன்படுத்த வேண்டும். விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்பிஜி விநியோக மையங்களில் எந்தவிதமான தட்டுப்பாடு, தட்டுப்பாடுகளும் பதிவாகவில்லை.
98 சதவீதம் அதிகரிப்பு: தொழில்துறை அடிப்படையில் ஆன்லைன் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவுகள் நேற்று 98 சதவீதம் அதிகரித்துள்ளன. பிஎன்ஜி மற்றும் மின்சாரம் அல்லது இன்டக்ஷன் அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருள் சாதனங்களைப் மக்கள் பயன்படுத்த வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில், அனைத்து மக்களும் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் எரிசக்தியைச் சேமிக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 மற்றும் எல்பிஜி கட்டுப்பாட்டு ஆணை, 2000 ஆகியவற்றின் கீழ், விநியோகத்தைக் கண்காணிக்கவும், பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.