

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமார் (80), உடல்நலக்குறைவால் டெல்லி திகார் சிறையில் நேற்று காலமானார்.
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. டெல்லி கலவரத்தில் மட்டுமே சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வன்முறைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் என டெல்லி காவல் துறையால் சுட்டிக்காட்டப்பட்டவர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார். செல்வாக்குமிக்க ஜாட் சமூகத் தலைவரான இவர், ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மற்றும் ஜெயின்-அகர்வால் குழு போன்ற விசாரணை அறிக்கைகளில் இடம் பெறாததால், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் குற்றவாளியாகச் சேர்க்கப்படாமல் இருந்தார்.
இருப்பினும், 2015-ல் பாஜக அரசு, முடித்து வைக்கப்பட்ட கலவர வழக்குகளை மீண்டும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. புதிய விசாரணையின் மூலம் வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, 30 ஆண்டுகளாகத் தப்பித்து வந்த சஜ்ஜன் குமாருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சஜ்ஜன் குமார், நேற்று உடல்நலக்குறைவால் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.