

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத வருமானத்தை பணமோசடி செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமானது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைமையகம், ஆரண்முறையில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டின்(TDB) முன்னாள் தலைவர் மற்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஏ. பத்மகுமாரின் இல்லம், இந்த வழக்கின் பிரதான குற்றச்சாட்டுக்கு உள்ளான உன்னிகிருஷ்ணன் போற்றியின் புலிமத்துவில் உள்ள இல்லம், TDB முன்னாள் ஆணையாளர் மற்றம் முன்னாள் தலைவர் என். வாசுவின் திருவனந்தபுரம் இல்லம், TDB-ன் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவின் கோட்டயம் இல்லம், சென்னை அம்பத்தூரில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற உலோகப் பட்டறையின் உரிமையாளர் பங்கஜ் பண்டாரியின் இல்லம் மற்றும் அலுவலகம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நகைக்கடைக்காரரான கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த கோவர்த்தனுக்குச் சொந்தமான வளாகம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்க விசாரணை ஆணையர் மற்றும் சிறப்பு நீதிபதி, அமலாக்கத் துறைக்கு கடந்த டிசம்பரில் அங்கீகாரம் அளித்ததை அடுத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் தற்போதைய விசாரணையை அமலாக்கத் துறையின் விசாரணை பாதிக்கும் என மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், மாநில அரசின் இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், குற்றம் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோயில் (கருவறை) கதவு சட்டங்களில் இருந்து தங்கம் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த இரண்டு வழக்குகளிலும் இதுவரை முதன்மை குற்றவாளி உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர்கள் இருவர் உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.