காங்கிரஸில் இணைக்கப்படுகிறதா திரிணமூல் காங்.? - கே.சி.வேணுகோபால் மறுப்பு

காங்கிரஸில் இணைக்கப்படுகிறதா திரிணமூல் காங்.? - கே.சி.வேணுகோபால் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தாய்க் கழகமான காங்கிரஸ் கட்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், அது அடிப்படையற்றது என்றும் காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, “இவை அனைத்தும் வதந்திகளே. இவை அடிப்படையற்றவை என்பதை நேற்றே எங்கள் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் (ஜெயராம் ரமேஷ்) தெளிவுபடுத்திவிட்டார். சோனியா காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்தபோதும், ராகுல் காந்தியை அபிஷேக் பானர்ஜி சந்தித்தபோதும் வழக்கமான விவாதங்களையே மேற்கொண்டார்கள்.

சமீபத்தில் நடந்த இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் நடந்த விவாதத்தின் தொடர்ச்சியே அது. இண்டியா கூட்டணியை வலுப்படுத்த ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அதேபோல், ஜனநாயக விரோத மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தையும் வலுப்படுத்த ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்த பாதையில் நாங்கள் இணைந்து பயணிப்போம். இதைத் தவிர வேறு ஏதுமில்லை” என தெரிவித்தார்.

மாநிலங்களவை தேர்தலில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் மனு நிராகரிக்கப்பட்டது நமது ஜனநாயகத்தின் பரிதாபகரமான நிலையைக் காட்டுவதாக கே.சி.வேணுகோபால் விமர்சித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “மத்தியப் பிரதேசத்தில் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றம் அனுப்பிய ஒரு நோட்டீஸை அவர் குறிப்பிடவில்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆனால், மீனாட்சி நடராஜன் மீது எந்த குற்ற வழக்கோ, முதல் தகவல் அறிக்கையோ, குற்றப்பத்திரிகையோ இல்லாத நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஜார்க்கண்ட்டில் பாஜக ஆதரவு பெற்ற பெரு நிறுவன வேட்பாளர் ஒருவர் உரிய இடத்தில் தனது பெயரைச் சரியாக குறிப்பிடாத போதிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி அவரது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார்.

ஒருபுறம் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது. மறுபுறம், பல குறைபாடுகள் கொண்ட வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்தின் பரிதாபகரமான நிலையையே காட்டுகிறது. வாக்குத் திருட்டுக்குப் பிறகு இப்போது சீட்டு திருட்டு நடைபெறுகிறது” என கூறினார்.

மேலும், காங்கிரஸ் சார்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்து தெரிவித்த கே.சி. வேணுகோபால், “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விவகாரம் உள்பட நாடு சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தேசிய அளவில் பிரச்சாரத்தைத் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் இது தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரம், தேசிய அளவில் மட்டுமல்லாது, மாநில, மாவட்ட, வட்ட அளவிலும் நடைபெறும்” என தெரிவித்தார்.

காங்கிரஸில் இணைக்கப்படுகிறதா திரிணமூல் காங்.? - கே.சி.வேணுகோபால் மறுப்பு
ஓமன் அருகே அமெரிக்க தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in