

ஹூக்ளி: “கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் குண்டர்கள் ஊடுருவி, செய்தியாளர்களை தாக்கினர்” என்று மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை மேற்குவங்க மாநிலம் ஹுக்ளியில் இன்று அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரப்பான்பூச்சிகள் என்ற பெயரில் கொல்கத்தா நகரின் வீதிகளில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் குண்டர்கள் சிலர் ஊடுருவி, அங்கிருந்த செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது காவல்துறை அது சார்ந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இது பாஜக அரசு. அதனால் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். செய்தியாளர்கள், பொது மக்களை தாக்கியவர்கள் அதற்கான தண்டனையைப் பெற வேண்டும் என்றார்.
முன்னதாக, மாணவர் போராட்டத்தில் சமூக விரோதிகள் சுமார் 70 பேர் இருந்தது தங்களுக்கு தெரியவந்துள்ளது எனவும், அவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அவர்கள் இதில் ஊடுருவிய காரணத்தால் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் ரகளை ஏற்பட்டதாக அவர் கூறினார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு - சிஜேபி இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டது.