மும்பை: ஆர்எஸ்எஸ் யாருக்கும் எதிரானது அல்ல என்றும், அது அதிகாரத்தை நாடவில்லை என்றும் தெரிவித்த மோகன் பாகவத், நாங்கள் யாரையும் எதிர்க்காமல் எங்கள் வேலையைச் செய்கிறோம் என கூறினார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100-ம் ஆண்டை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத், ‘‘ஆர்எஸ்எஸ்-ன் பணி தனித்துவமானது. எங்கள் புரிதலின் அடிப்படையில் இதுபோன்ற பணி உலகில் வேறு எங்கும் இல்லை என்று நாங்கள் கூறுவது வழக்கம். இப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அறிந்து கொள்ள வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம், இதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்கிறோம்.
ஐந்து கண்டங்களில் இருந்தும் மக்கள் வந்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளைப் பற்றி பல கேள்விகளைக் கேட்கிறார்கள். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா அல்லது மத்திய கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இறுதியில் அவர்கள் அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடு இளம் தலைமுறையினருக்கு ஏற்றது என்றும், நாட்டின் வரலாற்றில் கவுதம புத்தருக்குப் பிறகு இதுபோன்ற ஒரு அகில இந்திய முயற்சி நடந்தது இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பண்பாடு நம் அனைவரையும் இணைக்கிறது. இங்கு பல மொழிகள் உள்ளன, நாம் வணங்கும் தெய்வங்கள் பலவாக உள்ளன, உணவுப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. ஆனாலும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஓர் அடையாளம் உள்ளது. அதை நாங்கள் இந்து என்று அழைக்கிறோம்’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், இந்தி நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.