

புதுடெல்லி: கோயில் நகரங்கள், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: நவீன உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கோயில் நகரங்கள் மீது இனி நாங்கள் கவனம் செலுத்துவோம்.
இந்த பட்ஜெட், நகரங்களின் வளர்ச்சியைத் தூண்டும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ‘நகரப் பொருளாதார மண்டலங்களை' (CER) வரைபடமாக்குவதன் மூலம், நகரங்களின் பொருளாதார சக்தியை மேலும் அதிகரிக்க முயல்கிறது. இதற்காக, ஒரு மண்டலத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தலா ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இந்தத் திட்டங்கள் சீர்திருத்தம் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலான நிதி வழங்கும் முறையின் கீழ் செயல்படுத்தப்படும், மேலும் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கட்டுமானத்தின் போது ஏற்படும் இடர்கள் குறித்து தனியார் நிறுவனங்களின் நம்பிக்கையை வலுப்படுத்த, கடன் வழங்குபவர்களுக்கு முறையான பகுதி கடன் உத்தரவாதத்தை வழங்க ரூ.25 ஆயிரம் கோடியில் புதிய உள்கட்டமைப்பு இடர் உத்தரவாத நிதியம் உருவாக்கப்படும்.
ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வெளியிடப்படும் நகராட்சி பத்திரங்களுக்கு ரூ.100 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும். வளர்ச்சியை இணைக்கும் விதமாக முக்கிய நகரங்களுக்கு இடையே 7 அதிவேக ரயில் வழித் தடங்கள் நிறுவப்படும்.
மும்பை - புனே, புனே - ஹைதராபாத், ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு, டெல்லி - வாராணசி மற்றும் வாராணசி - சிலிகுரி ஆகிய நகரங்களை இணைக்க ஏழு அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.