

மும்பை: பழைய காஸ் பில்களை செலுத்தாவிட்டால் இரவுக்குள் காஸ் இணைப்பை துண்டிப்போம் என்று கூறி மும்பையில் பொதுமக்களிடம் ரூ.2.7 கோடியை ஏமாற்றிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் `மும்பையில் தி மஹாநகர் காஸ் லிமிடெட்' (எம்ஜிஎல்) என்ற காஸ் நிறுவன ஏஜென்சி உள்ளது. இந்நிலையில் அந்த காஸ் ஏஜென்சியின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மர்ம கும்பல் எஸ்எம்எஸ்-களை அனுப்பியுள்ளது. அதாவது இன்று இரவுக்குள் பழைய காஸ் பில்களை செலுத்தாவிட்டால் காஸ் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று கூறி அதனுடன் ஒரு செல்போன் அப்ளிகேஷனையும் இணைத்துள்ளனர்.
அந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து அதை நிரப்பு மாறும் அவர்கள் அந்த எஸ்எம்எஸ்-ஸில் தெரிவித்துள்ளனர். அந்த செல்போன் அப்ளிகேஷனை வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்தால், அந்த செல்போனில் உள்ள தகவல்களை அந்த சைபர் கிரைம் மர்ம கும்பல் திருடி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். கடந்த 30 நாட்களில் இதுபோன்று ரூ.2.7 கோடியை அவர்கள் சுருட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸார் மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.