

புதுடெல்லி: 2026-27-ம் ஆண்டு ராபி பருவத்துக்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (பி&கே) உரங்களுக்கு ரூ.62,370 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: 2026-27-ம் ஆண்டு ராபி பருவத்துக்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (பி&கே) உரங்களுக்கு ரூ.62,370 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உரங்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது.
இருப்பினும், போதுமான உர மானியத்தை வழங்குவதன் மூலம் விவசாயிகளின் நலன்களை அரசு பாதுகாத்துள்ளது. புவிசார் அரசியல் குழப்பங்களிலிருந்து விவசாயிகளுக்கு மோடி அரசு ஒரு கேடயத்தை வழங்கியுள்ளது. குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியை (சிஜிஎப்எம்யு) மேலும் 5 ஆண்டுகளுக்கு (2031 மார்ச் 31 வரை) தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.12.6 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்படுவதற்கு வழிவகை ஏற்படும்.
ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு
தகுதியான கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறும் அபாயத்துக்கு எதிராக, கடன் வழங்கும் நிறுவனங்களுக்குக் கடன் உத்தரவாதம் வழங்கும் இத்திட்டத்துக்கு ஆதரவளிக்க, ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.
அதேபோல, 'ஸ்டாண்ட்-அப் இந்தியா' திட்டத்தின் கீழ் கடன் உத்தரவாத நிதியை மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதற்காக ரூ.4,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், பட்டியல் சாதி (எஸ்சி), பட்டியல் பழங்குடி (எஸ்டி) சமூகங்களைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கும், பெண்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்
டெல்லியில் உள்ள நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் வளாகங்களை மறுபயன்பாட்டின் மூலம் யுக யுகீன் பாரத் அருங்காட்சியகமாக மாற்றும் ரூ.3,230 கோடி மதிப்பிலான திட்டம், ரூ.2,390 கோடி செலவில் நொய்டா செக்டர்-51 முதல் கிரேட்டர் நொய்டா செக்டர்-4 வரை அக்வா லைன் மெட்ரோ ரயில் வழித்தடத்தை நீட்டிக்கும் திட்டம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.