

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் 100 ‘அடல்' உணவகங்களை நேற்று திறந்து வைத்து முதல்வர் ரேகா குப்தா உணவு அருந்தினார். இங்கு, ரூ.5-க்கு மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது.
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தினமும் இரண்டு வேளை உணவு கிடைக்க போராடும் மக்களுக்கு திருப்தியான உணவு பத்தில் ஒரு பங்கு விலையில் கிடைத்தால் எப்படி சந்தோஷப்படுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். டெல்லி அரசு தற்போது அந்த கனவை நனவாக்கியுள்ளது.
அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு வழங்கும். வெறும் 5 ரூபாய்க்கு வழங்கப்படும் உணவில் பருப்பு,சாதம், சப்பாத்தி, அந்தந்தப் பருவத்திற்குரிய காய்கறி மற்றும் ஊறுகாய் ஆகியவை இருக்கும். அடல் உணவகம் டெல்லியின் ஆன்மாவாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.