

புதுடெல்லி: நாசாவில் 27 ஆண்டு காலம் பணியாற்றியவர் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (60). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் 3 முறை விண்வெளி மையத்துக்கு சென்று மொத்தம் 608 நாட்கள் தங்கியுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட காலம் தங்கியிருந்த நாசா வீரர்களில் இவர் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் கடைசியாக போயிங் நிறுவனத்தின் சோதனை விண்கலம் ஸ்டார்லைனரில் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையம் சென்றார். ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர் அங்கு தொடர்ந்து 286 நாட்கள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பின்னர் இவர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார். இவர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்த போது 9 முறை விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பர் 27-ம் தேதி இவர் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது இந்தியா வந்துள்ள சுனிதா வில்லியம் டெல்லியில் உள்ள அமெரிக்கன் மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: விண்வெளி பயணம் என்பது ஒரு குழு விளையாட்டு. இதில் அனைத்து நாட்டு விஞ்ஞானிகளிடம் ஒன்றிணைந்து ‘இது நமது கிரகம், நாம் விண்வெளியில் ஒன்றாக உள்ளோம்’ என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். விண்வெளிக்கு சென்றவுடன் நமது நாடு எங்குள்ளது என பார்க்க விரும்புவோம். எனது தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர், தாய் ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர்.
எனவே, நான் இந்த இடங்களை விண்ணில் இருந்து பார்ப்பேன். நமது பூமி கோள் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலர் இவற்றை வெறும் பாறைகளாக பார்க்கலாம். ஆனால், இது நகர்ந்து கொண்டிருக்கிறது. பல காலநிலைகளை சந்திக்கிறது. கடலின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது. பூமியின் வட மற்றும் தென் துருவத்தில் பனிக்கட்டிகள் சூழ்ந்திருப்பதை பார்க்கலாம்.
நமது பூமி பார்க்க மிக அழகாக இருக்கும். விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்ணங்கள் மாறுபடும். நாம் அனைவரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்தவர், நாம் ஒன்றிணைந்து, எளிதாக பணியாற்ற வேண்டும் என உணர வைக்கும். பூமியில் மனிதர்கள் இடையே ஏற்படும் வாக்குவாதங்கள் எல்லாம் முட்டாள்தனமாக தோன்றும். இவ்வாறு சுனிதா கூறினார்.