

மெஸ்ஸியுடன் ராகுல் காந்தி
அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கோட் இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நிகழ்வு, சனிக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்றது.
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அங்கு அவர் மெஸ்ஸியை சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் உடன் இருந்தார்.
இந்த நிகழ்வில், மெஸ்ஸி தனது அன்பின் அடையாளமாக, அர்ஜென்டினா அணியின் ஜெர்சி ஒன்றை ராகுல் காந்திக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் பரிசாக வழங்கினார். பதிலுக்கு ராகுல் காந்தியும், ரேவந்த் ரெட்டியும் மெஸ்ஸிக்கு நினைவுப் பரிசு வழங்கிக் கவுரவித்தனர்.
மெஸ்ஸியும், அவரது இன்டர் மியாமி அணி வீரர்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பு குறித்து, ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். மெஸ்ஸி மைதானத்திற்குள் நுழைந்த உடனேயே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட சுமார் 70 முதல் 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது.
அந்தக் கூட்டம் மெஸ்ஸியுடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராஃப் வாங்கவும் முயன்றது. இதன் விளைவாக, பார்வையாளர்களால் மெஸ்ஸியை கேலரிகளில் இருந்து பார்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், கோபமடைந்த கால்பந்து ரசிகர்கள் 'மெஸ்ஸியை காணவேண்டும்' என்று முழக்கமிடத் தொடங்கினர். இதன் காரணமாக மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் மெஸ்ஸியை உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதிக விலைக்கு டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்ற விரக்தியில் கால்பந்து ரசிகர்கள் கோபமடைந்தனர். மக்கள் மைதானத்தின் கேலரியின் அருகே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பெருமளவில் மைதானத்துக்குள் நுழைந்தனர். நூற்றுக்கணக்கானோர் மைதானத்துக்குள் புகுந்து, தற்காலிக மேடைகளை தலைகீழாகப் புரட்டினர். மேலும், மைதானத்தில் இருந்த சில பொருட்களுக்குத் தீயும் வைத்தனர். காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பார்வையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கொல்கத்தா மைதானத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.