“பாஜகவின் ஊழல் ஆட்சியால் நசுக்கப்படும் மாணவர்களின் உழைப்பு” - நீட் தேர்வு ரத்துக்கு ராகுல் கண்டனம்

“பாஜகவின் ஊழல் ஆட்சியால் நசுக்கப்படும் மாணவர்களின் உழைப்பு” - நீட் தேர்வு ரத்துக்கு ராகுல் கண்டனம்
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல, இளைஞர்களின் எதிர்காலத்துக்கு எதிரான ஒரு குற்றம் என்று ராகுல் காந்தி சாடியுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான புகார் காரணமாக கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், மறு தேர்வு குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமையின் இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் கடின உழைப்பு, தியாகங்கள், கனவுகள் இந்த ஊழல் மிகுந்த பாஜக ஆட்சியால் நசுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் இந்த தேர்வை எழுதுவதற்காக சில அப்பாக்கள் கடன் வாங்கினர், சில அம்மாக்கள் தங்கள் நகைகளை விற்றனர். லட்சக்கணக்கான மாணவர்கள் இரவெல்லாம் கண்விழித்துப் படித்தனர். ஆனால் அதற்குப் பரிசு, வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் அரங்கேறும் திட்டமிட்ட ஊழல் மட்டுமே. இது வெறும் தோல்வி மட்டுமல்ல, இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு எதிரான ஒரு குற்றம்.

ஒவ்வொரு முறையும் வினாத்தாள் கசிவு மாபியாக்கள் எவ்வித தண்டையும் இன்றி தப்பிவிடுகின்றனர். அதேநேரத்தில், நேர்மையான மாணவர்களே அதற்கான தண்டனையைச் சுமக்க வேண்டி உள்ளது. இப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சல், பொருளாதாரச் சுமை, நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை மீண்டும் சந்திக்க வேண்டி இருக்கும்.

ஒருவரின் எதிர்காலம் என்பது கடின உழைப்பால் அல்லாமல், பணம் மற்றும் செல்வாக்கால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்றால், கல்விக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?

‘அமிர்த காலம்’ என்று பிரதமரால் சொல்லப்படும் இந்த காலகட்டம் நாட்டுக்கு ஒரு ‘விஷக் காலமாகவே’ மாறிவிட்டது” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“பாஜகவின் ஊழல் ஆட்சியால் நசுக்கப்படும் மாணவர்களின் உழைப்பு” - நீட் தேர்வு ரத்துக்கு ராகுல் கண்டனம்
முருகானந்தம், உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in