“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” - பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” - பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
Updated on
2 min read

புதுடெல்லி: வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள 7 கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்தி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “நேற்று பிரதமர் மோடி மக்களிடம் தியாகங்களைக் கோரியுள்ளார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று. இவை வெறும் உபதேசங்கள் அல்ல - இவை தோல்விக்கான ஆதாரங்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று பொதுமக்களிடமே சொல்லும் அளவிற்கு நாட்டை அவர் ஒரு இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும், அவர்கள் தங்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காக, பழியை மக்கள் மீது சுமத்துகிறார்கள். சமரசத்துக்கு உள்ளான ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்துவது என்பது இனி அவரது எல்லைக்கு உட்பட்டதாக இருக்காது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்கா - ஈரான் போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் பிரதமர் திகைத்து நிற்பதாகக் குற்றம் சாட்டினார். தேர்தல்களும் அரசியலுமே பிரதமரின் முன்னுரிமையாக இருப்பதால், நாடு பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் எச்சரித்தார்.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், பிரதமரின் இந்தத் திடீர் கட்டளைகளுக்கான உண்மையான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையான நிலவரத்தை விளக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகள்: நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் 7 கோரிக்கைகளை பின்பற்ற முன்வருமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அவை பின்வருமாறு: 1. வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள இடங்களில் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 2. ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 3. பெட்ரோல் / டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். 4. சமயல் எண்ணை பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். 5. ரசாயன உர பயன்பாட்டை குறைத்துக்கொண்டு இயற்கை உரத்துக்கு மாற வேண்டும். 6. வெளிநாட்டு தயாரிப்புகளைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். 7. வெளிநாட்டுப் பயணங்களை ஓர் ஆண்டுக்கு தவிருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காலத்தைப் போல வீடியோ கான்பரன்சிங் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது, நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” - பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திட்டம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in