

புத்தாண்டையொட்டி ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று ரந்தம்போருக்கு வருகை தந்தனர்.
சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ளது ரந்தம்போர் சரணாலயம். இது புலிகள் மற்றும் செழுமையான பல்லுயிர் பெருக்கத்திற்கான முக்கிய இடமாகும். மேலும், இது, சுற்றுலாப் பயணிகளுக்கு மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், உதய்பூர், ஜோத்பூர் மற்றும் முக்கிய மத வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் பாரம்பரிய சொகுசு விடுதிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. தங்கும் விடுதிகளுக்கான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்க, ஜெய்ப்பூர் மற்றும் பிற நகரங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புத்தாண்டு பிறப்பதையொட்டி ராகுல் மற்றும் பிரியங்கா குடும்பத்தினரும் ராஜஸ்தானில் சுற்றுலா மேற்கொள்வதற்காக நேற்று ரந்தம்போரை வந்தடைந்தனர்.