

புது டெல்லி: பஞ்சாப் தொடர்பான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை என்ற ஆம் ஆத்மி கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு, பஞ்சாப் சார்ந்த விவகாரங்கள் குறித்து மாநிலங்களவையில் தான் எழுப்பிய கேள்விகள் அடங்கிய காணொலியை மாநிலங்களவை எம்.பி ராகவ் சத்தா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ராகவ் சத்தா வெளியிட்ட காணொளியில், பஞ்சாப் சார்ந்த பிரச்சினைகள் குறித்து நான் மாநிலங்களவையில் ஆற்றிய உரைகளின் தொகுப்பை வெளியிடுகிறேன். இதில், நான் கானா சாகிப் வழித்தடத்தை அமைக்குமாறு வலியுறுத்தியது, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதங்களைக் கோரியது, பகத் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப் பரிந்துரைத்தது மற்றும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரச சிம்மாசனத்தைத் திரும்பப் பெறுமாறு கோரியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்காணொளியுடன் அவர் வெளியிட்ட பதிவில், “ராகவ் சத்தா நாடாளுமன்றத்தில் பஞ்சாப் பிரச்சினைகளை எழுப்பத் தவறிவிட்டார் என்று குற்றம்சாட்டி என்னை இதுபோன்ற ஒரு காணொளியை வெளியிடும் நிலையை உருவாக்கிய எனது ஆம் ஆத்மி கட்சி சகாக்களே, இதோ உங்களுக்காக ஒரு சிறிய முன்னோட்டம், படம் இன்னும் முடியவில்லை. பஞ்சாப் என்பது எனக்கு வெறும் பேச்சுப் பொருளோ அல்லது விவாதப் பொருளோ அல்ல. அதுவே எனது வீடு; அதுவே எனது கடமை; அதுவே எனது மண்; அதுவே எனது ஆன்மா” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட கட்சித் தலைமையுடன் பல மாதங்களாக நிலவி வந்த மோதல்போக்கு காரணமாக, கடந்த வாரம் ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராகவ் சத்தா கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலம் சார்ந்த பிரச்சினைகளை ராகவ் சத்தா எழுப்பவில்லை என்று பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“தேசிய அளவில் பஞ்சாப் மாநிலத்தின் பிரச்சினைகளை வலிமையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புடன், பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களால் ராகவ் சத்தா மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பஞ்சாப் தொடர்பான மிக முக்கியமான, உணர்வுபூர்வமான பிரச்சினைகளில் ஒன்றைக் கூட அவர் எழுப்பாமல் முழுமையாகத் தவிர்த்துவிட்டார். மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து மௌனம் சாதிப்பது, பஞ்சாப் மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் இழைக்கப்படும் ஒரு துரோகமாகும்” என்று பஞ்சாப் மாநில அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறினார்.
மேலும், பிரதமர் மோடியையும், பாரதிய ஜனதா கட்சியையும் விமர்சித்து வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவுகளையும் ராகவ் சத்தா நீக்கிவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.