

புதுடெல்லி: மக்களவையைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து நாடு முழுவதும் மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
இதன்படி கடந்த 27-ம் தேதி மக்களவையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 28-ம் தேதி மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. நாடாளுமன்ற பேரணியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியபோது கூச்சல், குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது வழக்கம்போல அமளி ஏற்பட்டது. இதனால் 3.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றம்
மீண்டும் அவை கூடியபோது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
புதிய மசோதாவின்படி வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மசோதா நிறைவேறிய பிறகு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா பேசும்போது, “அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன” என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி பேசும்போது, “நாடாளுமன்ற பேரணியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அமைச்சர் அமித் ஷா அவைக்கு வராததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன்பிறகு பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: யுபிஎஸ்சி, ஆஆர்பி, ஐபிபிஎஸ், தேசிய தேர்வு முகமை ஆகியவை போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏராளமான போட்டி, நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்தன.
தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: வினாத்தாளை கசிவில் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர். வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் பல்வேறு கொடுமைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவில் தண்டனை காலம், அபராதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதாவால் எந்த பயனும் இல்லை. கடந்த 2024-ல் நீட் வினாத்தாள் கசிந்தது. மீண்டும், மீண்டும் நீட் வினாத்தாள் கசிவது ஏன்? கடந்த 2024-ம் ஆண்டு நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியை நிரபராதி என்று சிபிஐ தற்போது கூறுகிறது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் சிபிஐ வழக்கறிஞர்கள் ஆஜராவதைகூட தவிர்க்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் சுமார் 1.25 லட்சம் மாணவ, மாணவியர் தற்கொலை செய்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார். பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி பேசும்போது, “காங்கிரஸ் தலைவர் கார்கே பொய்களை பரப்புகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
இரவு 9 மணி வரை விவாதம் நீடித்தது. இறுதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026 நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் புரி, சர்வானந்த சோனோவால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.