

புனே: வருங்கால கணவர் கேத்தனிடம் ரூ.1 கோடி வாங்கி காதலன் சேத்தனுக்கு சியா கோயல் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் (26). இவர் சக்சஸ் குரூப் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இவருக்கும் புனேவை சேர்ந்த சியா கோயலுக்கும் (20) கடந்த பிப்ரவரி 11-ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் நவம்பரில் ரூ.17 கோடி செலவில் உதய்பூரில் உள்ள அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக சியா கோயலும் புனேவை சேர்ந்த மளிகை கடைக்காரர் சேத்தன் சவுத்ரியும் (22) ரகசியமாக காதலித்து வந்துள்ளனர். வருங்கால கணவர் கேத்தனிடம் தனது காதலை மறைத்த சியா, அவரிடம் இயல்பாக பழகி வந்துள்ளார்.
அதேநேரம் சியாவும் சேத்தனும் சேர்ந்து கேத்தனை கொலை செய்ய ரகசியமாக திட்டம் தீட்டி உள்ளனர். கடந்த 18-ம் தேதி ராஜஸ்தானின் மேற்குதொடர்ச்சி மலையில் 3,389 அடி உயரத்தில் அமைந்துள்ள லோகாகாட் கோட்டைக்கு கேத்தனை அழைத்துச் சென்ற சியா, மலை உச்சியில் இருந்து அவரை கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
இந்த வழக்கு குறித்து புனே போலீஸார் கூறியதாவது: கடந்த மே 31-ம் தேதி வருங்கால மனைவி சியாவை லோகாகாட் கோட்டைக்கு கேத்தன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கேயே கேத்தனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி உள்ளார். இதற்காக பலமுறை ஒத்திகை பார்த்து உள்ளனர்.
கடந்த 19-ம் தேதி சியாவின் பிறந்த நாள். மகாராஷ்டிராவின் பிரபல சுற்றுலா தலமான மகாபலீசுவர் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவரின் பிறந்த நாளை கொண்டாட கேத்தன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் சியா, வலுக்கட்டாயமாக கேத்தனை லோகாகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு சியாவும் சேத்தனும் சேர்ந்து மலை உச்சியில் இருந்து கேத்தனை தள்ளி கொலை செய்து உள்ளனர்.
வருங்கால கணவர் கால் தவறி 400 அடி பள்ளத்தில் விழுந்து விட்டதாக சியா நாடகமாடினார். ஆனால் போலீஸாரின் விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. கோடீஸ்வரரான கேத்தனிடம் இருந்து சியா அவ்வப்போது பெரும் தொகையை பெற்று வந்துள்ளார். குறிப்பாக திருமணத்துக்கு நகைகள், ஆடைகள் வாங்க வேண்டும். இதற்கு ரூ.1 கோடி தேவைப்படுகிறது என்று இந்த மாத தொடக்கத்தில் கேத்தனிடம் சியா கேட்டுள்ளார்.
உடனே வருங்கால மனைவிக்காக ரூ.1 கோடி ரொக்கத்தை கேத்தன் வாரி வழங்கியுள்ளார். இந்த பணத்தை தனது காதலர் சேத்தன் சவுத்ரியிடம் சியா கொடுத்திருக்கிறார். தற்போது புனேவில் சிறிய மளிகை கடையை சேத்தன் நடத்தி வருகிறார்.
சியா அளித்த ரூ.1 கோடியில் தொழிலை விரிவுபடுத்தி அடுத்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலதிபராக உருவெடுக்க அவர் திட்டமிட்டு உள்ளார். இதன்பிறகு சியாவும் சேத்தனும் திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.