

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கண்டித்து, நாடாளுமன்றத்தில் நேற்று 2-வது நாளாக இண்டியா கூட்டணி கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) எதிராக கோஷமிட்டனர். எம்.பி.க்கள் அமைதி காக்குமாறு அவைத் தலைவர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது
மக்களவை மீண்டும் கூடிய போது, எஸ்ஐஆர் பணி மூலம் வாக்கு திருட்டு நடைபெறுகிறது என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் கோஷம் எழுப்பினர். எஸ்ஐஆர் தொடர்பாக அவையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “தேர்தலில் வெற்றி, தோல்வி இயல்பானது. ஆனால், சில கட்சிகள் தேர்தல் தோல்வி விரக்தியால் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. எந்தவொரு விவகாரம் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, “கடந்த காலத்தில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் நாடகம் நடத்தின. தற்போது மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்காமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார்.
இறுதியில் மணிப்பூர் ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாலை 4 மணி அளவில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று பிற்பகலில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தேர்தல் சீர்திருத்த விவாதம்: மக்களவைத் தலைவர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. வந்தே மாதரம் தேசிய பாடலின் 150-வது ஆண்டு நிறைவை ஒட்டி டிசம்பர் 8-ம் தேதி மதியம் 12 மணிக்கு மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கும். இதேபோல தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக டிசம்பர் 9-ம் தேதி மதியம் 12 மணிக்கு மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “வந்தே மாதரம் தேசிய பாடல் மீதான விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும். டிசம்பர் 9-ம் தேதி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தின் இறுதியில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில் அளிப்பார்” என்று தெரிவித்தன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று தொடங்குவதற்கு முன்பாக இண்டியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் எஸ்ஐஆர் பணியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமை வகித்தார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “எஸ்ஐஆர் பணியை எதிர்த்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஜனநாயகத்தை காப்பாற்றவும் நீதியை நிலைநாட்டவும் எங்களது ஆர்ப்பாட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.
சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. காங்கிரஸை புறக்கணிக்கும் வகையில் இருகட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.