

ஸ்ரீநகர்: ஈரான் தலைவர் காமேனி மரணத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதிக்கு நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் பல்வேறு மத மற்றும் சமூக அமைப்புகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதற்கு மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ பார்வையாளர்கள் குழு தலைமையகத்தின் முன் ஏராளமான மக்கள் கூடி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டங்கள் மேலும் பரவாமல் தடுக்க ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் பல பகுதிகளில் நேற்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
போராட்டங்களின் மையப் பகுதியான லால் சவுக் பகுதிக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. மொபைல் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பல இடங்களில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.