ஜார்க்கண்ட் பேரவை வளாகம் அருகே மாணவர் பேரணியில் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு

ஜார்க்கண்ட் பேரவை வளாகம் அருகே மாணவர் பேரணியில் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு
Updated on
2 min read

ராஞ்சி: அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி இன்று ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றபோது, ​​அவர்கள் மீது காவல் துறை தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் மூலமும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கட்டுப்படுத்தியது.

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 'ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா' (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோவும், ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு இந்தப் பேரணியில் கலந்துகொண்டார். அவர் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் உருவப்படத்தை கையில் ஏந்தியிருந்தார்.

ராஞ்சியில் சட்டப்பேரவை முற்றுகைப் பேரணியின்போது மாணவர் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ பேசுகையில், “இந்தப் போராட்டம் நிற்கப்போவதில்லை. இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. 'யுவா' (Yuva - இளைஞர்) என்ற சொல்லின் எழுத்துகளைத் தலைகீழாக மாற்றினால் 'வாயு' (Vayu - காற்று) என்று வரும். அந்த 'வாயு'வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தப் பேரணியில் மாணவர்களின் வேதனையை நீங்கள் காணலாம். ஒன்பது நாட்கள் நீடித்த எனது உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகும், நான் ஆம்புலன்ஸில் வந்து, இப்போது ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடி இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ளேன். ஆனால், இந்த அரசு எங்கள் குரலை ஒடுக்குகிறது. தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களையும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது.

இந்த அரசு பயப்படுகிறது. இது ஒரு கோழைத்தனமான அரசு. அரசு பயப்படும்போதெல்லாம் காவல் துறையை முன்னிறுத்துகிறது. நாங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். அரசுடன் மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்; அவர்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்படும். அரசு ஆட்டம் காணும். இந்தப் போராட்டம் நிற்காது. இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது" என்றார்.

பழைய சட்டப்பேரவை கட்டிடத்துக்கு வெளியே காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தப் பேரணி, பிற்பகலில் புதிய சட்டப்பேரவை வளாகத்தை நெருங்கியது.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றபோதிலும், அவர்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைக் கடந்து சென்றனர். ஜெகந்நாத்பூர் கோயிலுக்கு அருகிலுள்ள இறுதித் தடுப்பை பேரணி அடைந்தபோது, ​​காவல் துறை தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியது.

காவல் துறையினர் பலமுறை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், போராட்டக்காரர்கள் பின்வாங்க மறுத்துவிட்டனர். அதன்பின்னர் சட்டப்பேரவையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் போராட்டக்காரர்கள் இருந்தபோது, அவர்களைக் கலைக்கக் காவல் துறையினர் தடியடி நடத்தினர். இந்த பரபரப்பான சூழலில் காவல்துறையினர் அடுத்தடுத்து ஆறு முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. தடியடியின்போது தங்கள் தலை, கைகள் மற்றும் முகத்தில் காவல் துறையினர் தாக்கியதாக போராட்டக்காரர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.

போராட்​ட பின்​னணி:

கடந்த சில மாதங்​களாகவே ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (ஜேபிஎஸ்​சி) மற்​றும் ஊழியர் தேர்வு வாரி​யம் (ஜேஎஸ்​எஸ்​சி) மூலம் நடத்தப்படும் தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடப்​ப​தாகக் கூறி மாணவர்​கள் போராடி வரு​கின்​றனர். அரசு தரப்​பில் இதுவரை ஆறு முறை பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்ட போ​தி​லும், மாணவர்​களின் முக்​கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட​வில்​லை. இதனால், மாநிலம்​ தழு​விய அளவில்​ போராட்டங்​கள்​ தீவிரமடைந்து வருகின்​றன.

மாணவர்கள் அமைப்பினருடன் ஜார்க்கண்ட் அமைச்சர் சுதிவ்யா குமார் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, தேர்வுகள் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் ஒரு குழுவை அமைக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சர் சுதிவ்யா தெரிவித்தார். ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்களுக்கு சிஐடி சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் ராஜினாமாவையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்​கண்ட் மாநில அரசுத் துறை தேர்​வு​களில் வெளிப்படைத் ​தன்​மையை உறுதி செய்ய வேண்​டும், தேர்வு முறை​கேடு​களைத் தடுக்க வேண்​டும் மற்​றும் உள்​ளூர்​வாசிகளுக்கு முன்​னுரிமை அளிக்​கும் வகை​யில் வேலை​வாய்ப்​புக் கொள்​கை​களில் திருத்​தம் கொண்டு வர வேண்டும், வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்கைகளை வலி​யுறுத்தி மாணவர்​கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ஜார்க்கண்ட் பேரவை வளாகம் அருகே மாணவர் பேரணியில் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு
தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம் நிறைவேற்றம்: அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் விஜய் நன்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in