

லக்னோ: அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. இதில் மாணவர் ஒருவர் 17 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
உத்தர பிரதேசம் அலிகர் நகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், சுமார் 150 வருடங்கள் பழமையானது. மத்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழகமான இதன் மாணவர் பேரவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனெனில், இதன் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்திய அரசியலில் நுழைந்து தலைவர்களாக உருவெடுத்துள்ளனர்.
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர். ஜாகீர் உசைன் மற்றும் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆஸம்கான், கேரளாவின் முன்னாள் ஆளுநர் ஆரிப் முகமது கான் உள்ளிட்ட பலரும் இப்பல்கலைக்கழக மாணவர் பேரவையில் இருந்தவர்கள். இதில் சுமார் 40,000 மாணவர்கள், 3,500 பேராசிரியர்கள் மற்றும் 5,000 அலுவலர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இதன் சிறுபான்மை அந்தஸ்துக்கு தடை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உள்ளது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகமான அதன் மாணவர் பேரவைத் தேர்தல் கடந்த 2018-19 கல்வியாண்டு முதல் நடத்தப்படவில்லை. இதை நடத்த வலியுறுத்தி, எம்.ஏ. (உருது) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் யாசீர் பஹாத் அக்டோபர் 17 முதல் வளாகத்தின் நுழைவு வாயில் அருகே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது உடல்நிலை குன்றுவதைச் சுட்டிக்காட்டிய பல்கலைக்கழக நிர்வாகம், நேற்று காலையில் அவரை அகற்ற முயன்றது. இதற்கு யாசீர் மறுக்க தற்போது போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மாணவர் யாசீர் பஹாத் கூறும்போது, ‘பல்கலையில் கடந்த ஏழு வருடங்களாக நடைபெறும் ஊழலை தட்டிக் கேட்போம் என்பதால் பேரவைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இத்துடன், போராட்ட மாணவர்கள் இடைநீக்கம் மற்றும் காவல் நிலையத்தில் பதிவான 18 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி நாங்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெறும்’ என்றார்.
இதனிடையே, போராட்டக் குழுவினரை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நைமா காத்தூன் அழைத்து, சற்று கால அவகாசம் கேட்டுப் பேசியும் பலனில்லை. நாட்டின் பொதுவான பல பிரச்சினைகளிலும் அலிகர் பல்கலையின் மாணவர் பேரவை தலையிட்டு போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாகி விடுவது வழக்கம்.
இதனால், பெரும்பாலான துணைவேந்தர்கள் பேரவைத் தேர்தலை நடத்துவதில்லை. கடந்த டிசம்பர் 2019-ல் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அறிமுகமானபோது அலிகர் மாணவர்கள்தான் முதலாவதாகப் போராட்டம் தொடங்கினர். பிறகு அது நாடு முழுவதிலும் பரவியது நினைவுகூரத்தக்கது.