

புதுடெல்லி: சண்டிகரை அரசியலமைப்பின் 240வது பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கான மத்திய அரசின் சட்டம் இயற்றும் செயல்முறையை எளிமைப்படுத்தும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சண்டிகரை அரசியலமைப்பின் 240வது பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் எந்த வகையிலும் சண்டிகரின் ஆட்சி அல்லது நிர்வாக அமைப்பை மாற்ற முயலவில்லை. மேலும், சண்டிகருக்கும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு இடையிலான பாரம்பரிய ஏற்பாடுகளை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
சண்டிகரின் நலன்களைக் கருத்தில் கொண்டு அனைத்து பங்குதாரர்களுடனும் போதுமான ஆலோசனைகளை மேற்கொண்டு அதன் பிறகே, பொருத்தமான முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எந்த கவலையும் தேவையில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதுபோன்ற எந்தவொரு மசோதாவையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் யூனியன் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகராக உள்ளது. பஞ்சாப் ஆளுநர், இதன் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கு தனி துணை நிலை ஆளுநரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு வழிவகை செய்யும் வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் 240வது பிரிவின் கீழ் கொண்டு வருவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பிரிவு 240ன் கீழ், அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.