

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூருவில் பிங்க் வழித்தட மெட்ரோ ரயில் சேவையையும், பெங்களூருவில் இருந்து மட்காவுன் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு கர்நாடக ஆளுநர் சுதா யாதவ், முதல்வர் டி.கே.சிவகுமார், மத்திய இணை அமைச்சர் சோமண்ணா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். அங்கிருந்து ஆனேக்கலில் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானத்துக்கு சென்று பிரசாந்தி குதிரம் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
முன்னதாக ஆனேக்கல் சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பாஜக ஆதரவாளர்களும், பொதுமக்களும் பூக்களை தூவி பிரதமரை வரவேற்றனர். வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களை நோக்கி பிரதமர் கையசைத்தார். அங்கு குவிந்திருந்த இளைஞர் காங்கிரஸார், ‘ராகுல், ராகுல்’ என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து, வேனில் ஏற்றி சென்றனர்.
பகல் 12.45 மணிக்கு தாவரக்கெரேவில் இருந்து பெங்களூரு ஐ.ஐ.எம். வரையிலான பிங்க் வழித்தட மெட்ரோ சேவையை முதல்வர் டி.கே.சிவகுமாருடன் இணைந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆளுநர் சுதா யாதவ், முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோருடன் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூரு-மட்காவுன் செல்லும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஹாசன், சிக்கமகளூரு, மங்களூரு, கோகர்ணா உள்ளிட்ட கர்நாடக மாநில நகரங்களின் வழியாக கோவாவில் உள்ள மட்காவுனுக்கு செல்கிறது. இந்த ரயில் மூலம் கோவாவுக்கு 13 மணி நேரத்தில் செல்வதுடன், இயற்கை எழில் மிகுந்த காட்சிகளையும் ரசிக்க முடியும் என்று ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பிரதமர் மோடி பெங்களூருவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விரிவுபடுத்தப்பட்ட சிக்கமகளூரு, சாம்ராஜ்நகர், சக்லேஷ்பூர், சுப்ரமணியா சாலை ஆகிய 4 ரயில் நிலையங்களை காணொலி மூலம் திறந்துவைத்தார்.
முன்னதாக பெங்களூருவில் பிரதமர் மோடி பேசுகையில், “தொழில்நுட்பத் துறையில் பெங்களூரு சர்வதேச நகரமாக மாறி வருகிறது. மெட்ரோ ரயிலின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளும், புத்தாக்க முயற்சிகளும் பெங்களூருவில் ஆரம்பமாக இருக்கின்றன. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு 50 சதவீத நிதியை வழங்கியுள்ளது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள 60க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு சர்வதேச தரத்துக்கு விரிவுப்படுத்தப்படுகின்றன” என்றார். இதையடுத்து மைசூருவுக்கு விமானம் மூலம் சென்ற பிரதமர் அங்கு, சாமுண்டி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காஸ்மோஸ் கோளரங்கை திறந்துவைத்தார்.