

புதுடெல்லி: “புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை” என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கூறினார்.
மக்களவையில் நேற்று பொதுத்தேர்வு (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026-ஐ மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் அமளியில் அன்றைய தினம் மசோதா மீது விவாதம் நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் மசோதா மீதான விவாதம் தொடங்கியது.
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 152 போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. ஆனால், இந்த வழக்குகளில் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது ஏன்? ஏகே 47 துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன்?
மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு குறைந்து வருகிறது. கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களின் விடுதலையை பிரகலாத் ஜோஷி வரவேற்றார். தற்போது மத்திய கல்வி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் கோடிக்கணக்கான மாணவிகளுக்கு மத்திய அரசு என்ன சொல்ல விரும்புகிறது? புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை” என்றார்.
மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடர்பான பிரியங்கா காந்தியின் கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் கண்டனம் தெரிவித்தார். “ஜோஷி மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவையில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன.