

அமைச்சர் ரமேஷ்
படம்: ர. செல்வமுத்துகுமார்
தூத்துக்குடி: பெரிய கோயில்களில் தரிசன வரிசையை முறைப்படுத்த தனியார் நிறுவனங்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாதாரண நாட்களிலேயே பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கோயிலில் தினமும் 9 கால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு பூஜைக்கும் 15 முதல் 20 நிமிடங்கள் திரையிடப்படுகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. கந்த சஷ்டி விழா நாட்களில் ரூ.100 கட்டணம் வாங்கக் கூடாது என கூறியுள்ளோம். இதன்மூலம் தரிசன வரிசைகளை வேகமாக அனுப்பி வருகிறோம்.
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோயில்களில் தரிசன வரிசைகளை முறைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதில், பொது தரிசனம், கட்டண தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் என ஒவ்வொரு சாராரையும் எந்தெந்த வரிசைகளில், எவ்வளவு நேரத்தில் அனுப்பலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதற்கான ஆய்வறிக்கை கிடைத்ததும் முறையான வரிசை முறை அமல்படுத்தப்படும். அப்போது, பொது தரிசனம் வழியில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.