

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, சிறைக் கைதிகள் தங்கள் ரத்த சொந்தங்கள் மூலம் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன. டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சிறைக் கைதிகளுக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடக் கோரி, மதுரை, கே.புதூரைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள, விசாரணை கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் குறிப்பிட்ட ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளிடமும் நடத்த வேண்டும். இது சம்பந்தமாக அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில், சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, சிறையில் இருக்கும் வாக்காளர் சார்பில், அவரது ரத்த சொந்தங்கள், படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இல்லாவிட்டால், பின்னாளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி. தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.