வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடி, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரிவிதிப்பு காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ளது. மேலும், எச்1பி விசா, பாசுமதி அரிசி வர்த்தகம் ஆகியவற்றிலும் இந்தியாவுக்கு பாதகமான நடவடிக்கை ட்ரம்ப் எடுத்துள்ளார். இதனையடுத்து வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் நோக்கத்தில் இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி இன்று (டிச.11) தொலைபேசியில் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில், இந்தியா - அமெரிக்க கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்ததாகவும், வர்த்தகம், முக்கிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இருவரும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், ‘அனைத்துத் துறைகளிலும் இரு தரப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளதில் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். சவால்களை எதிர்கொள்ளவும், பொதுவான நலன்களை முன்னெடுத்துச் செல்லவும் நெருக்கமாக இணைந்து செயல்பட பிரதமர் மோடியும் ட்ரம்பும் ஒப்புக்கொண்டனர்.

21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியா - அமெரிக்க COMPACT (ராணுவ கூட்டாண்மை, விரைவுபடுத்தப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான வாய்ப்புகளை ஊக்குவித்தல்) ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு மையமாக உள்ள முக்கிய தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் பிற முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அதிபர் ட்ரம்ப்புடன் மிகவும் அன்பான மற்றும் ஈடுபாடு மிக்க உரையாடலை மேற்கொண்டேன். எங்கள் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஆய்வு செய்தோம்.

மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
‘பி.ஆர்.பாண்டியனை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை’ - அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in