

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேபாள பிரதமராக கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்த அவரை, விமான நிலையத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா வரவேற்றார்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன், பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல், போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்துதல், எரிசக்தி, உள்கட்டமைப்பு, முதலீடு போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர். கல்வி, சுகாதாரம், விவசாயம், விளையாட்டு, பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள பிரதமரின் இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியையும் நேபாளத்தில் உள்ள ஜனக்பூரையும் இணைக்கும் சரயு - கமலா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவை தொடக்க விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உத்தராகண்டின் பன்பாசாவில் ஒரு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியைத் இவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பார்கள் என்றும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.