

உடுப்பியில் பிரதமர் மோடி
உடுப்பி (கர்நாடகா): இந்தியா தற்சார்பு அடைய நாட்டு மக்கள் 9 முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று காலை, உடுப்பியில் உள்ள கிருஷ்ண மடத்துக்கு வருகை தந்தார். அவரை மடாதிபதி, துறவிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஒரு லட்சம் பேர் திரண்டு பகவத் கீதையை ஒப்பிக்கும் லட்சகந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். கிருஷ்ணர் கோயில் கருவறை முன்னால் உள்ள சொர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, துறவி கனகதாசர், கிருஷ்ணரை தரிசனம் செய்ததாக நம்பப்படும் புனித கனகன சாளரத்துக்கு தங்கக் கவசத்தை அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஜனசங்கத்தைச் சேர்ந்த (பாஜகவின் முந்தைய பெயர்) வி.எஸ். ஆச்சார்யா 1968-ம் ஆண்டு உடுப்பி நகராட்சிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், புதிய ஆட்சிமுறைக்கு வித்திட்ட நகரம் உடுப்பி. எனவே, ஜனசங்கத்துக்கும், பாஜகவுக்கும் உடுப்பி ஒரு கர்ம பூமி.
ஒரு லட்சம் மக்கள் ஒன்றிணைந்து பகவத் கீதையின் சுலோகத்தை பாராயணம் செய்வதன் மூலம் இந்தியாவின் தெய்வீகத் தன்மையை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த பாராயணத்தின் மூலம் தெய்வீக வார்த்தைகள் உலகின் ஒரு பகுதியில் எதிரொலிக்கின்றன, அதன்மூலம் வெளிப்படும் ஆற்றல் நமது மனதுக்கும் உடலுக்கும் சக்தியை அளிக்கிறது. ஆன்மிகத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் பின்னால் இந்த சக்தி உள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு, கீதை பிறந்த இடமான குருக்ஷேத்திரத்தில் நான் இருந்தேன். இன்று பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதத்துடன் ஜகத்குரு மத்வாச்சாரியார் மண்ணுக்கு வந்துள்ளேன். இது மிகப் பெரிய திருப்தியை எனக்கு அளித்துள்ளது.
நான் குஜராத்தில் பிறந்தேன். குஜராத்துக்கும் உடுப்பிக்கும் ஆழமான உறவு உள்ளது. துவாரகாவில் அன்னை ருக்மணி வழிபட்ட கிருஷ்ணர் சிலை, ஜகத்குரு மத்வாச்சார்யர் அவர்களால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு கடலுக்குள் உள்ள துவாரகாவுக்கு நான் சென்றேன். இங்குள்ள கிருஷ்ணரை தரிசித்தது ஆன்ம மற்றும் ஆன்மிக அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது.
நமது நாடு தற்சார்பு அடைய நாட்டு மக்கள் 9 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். 1. தண்ணீரையும் நதிகளையும் நாம் பாதுகாக்க வேண்டும், 2. அம்மாவின் பெயரில் நாம் ஒரு மரம் நட வேண்டும், 3. வறுமையில் இருக்கும் ஒருவரையாவது நாம் முன்னேற்ற வேண்டும், 4. நமது பொருளாதாரத்தையும் தொழில்முனைவோரையும் பாதுகாக்க சுதேசி இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டும், 5. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், 6. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும், 7. எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும், 8. யோகாவை நாம் நமது வாழ்வின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும், 9. நமது பண்டைய நூல்களை பாதுகாக்க வேண்டும். நாம் நமது பண்டைய அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்குப் பெயர் பெற்ற 25 இடங்களுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னதாக, உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு உடுப்பி நகர வீதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு புறமும் மக்கள் பெருமளவில் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.