

கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஆல்டண்டி டோலா கிராமத்தைச் சேர்ந்த ஆஷா சந்தோஷ் கிரங்கா (24) 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரது கிராமத்துக்கு சாலை வசதி இல்லை. அதேநேரம், அங்கு மருத்துவ வசதிகளும் இல்லை.
இந்நிலையில், பிரசவ வலிக்கு முன்பே சாலை வசி உள்ள பெத்தா என்ற ஊரில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதற்காக அந்தப் பெண் ஜனவரி 1-ஆம் தேதி தனது கணவருடன் காடுகளின் வழியாக 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார்.
ஜனவரி 2-ஆம் தேதி காலையில் அவருக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஹெத்ரியில் உள்ள காளி அம்மாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய முடிவு செய்தனர். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், காலம் கடந்துவிட்டதாகவும் குழந்தை ஏற்கெனவே கருப்பையிலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் ரத்த அழுத்தம் அதிகரித்ததால், அந்தப் பெண்ணும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கட்சிரோலி மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் பிரதாப் ஷிண்டே கூறும்போது, “அந்தப் பெண் ஆஷா பணியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டவர். திடீர் பிரசவ வலியும் சிக்கல்களும் அவர் நடந்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை. சுகாதார அதிகாரியிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது, இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.