

டெல்லி பாஜக எம்.பி.பிரவீன்
புதுடெல்லி: நிலையான, சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தேசிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கையை வகுக்க வேண்டும் என பாஜக எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி சாந்தினி சவுக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.பிரவீன் கண்டேல்வால் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “நம் நாட்டின் மக்கள் தொகை 140 கோடியைத் தாண்டி உள்ளது. மக்கள் தொகை என்பது ஒரு மதிப்புமிக்க சொத்து மற்றும் மகத்தான மனித மூலதனத்தின் ஆதாரமாக இருக்கிறது. ஆனாலும், அது இயற்கை வளங்கள், உள் கட்டமைப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் சுகாதாரம், கல்வி போன்ற பொதுச் சேவைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, வேகமான மக்கள் தொகை வளர்ச்சி என்பது நகர்ப்புற நெரிசல், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், சுற்றுச்சூழல் அழுத்தம் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் சுமையை ஏற்படுத்துகிறது. ஒரு கொள்கை கட்டமைப்பின் மூலம் இதை சரிசெய்யாவிட்டால், இந்த சவால்கள் நாம் வளர்ந்த நாடாக மாறுவதற்கான பயணத்தைத் தடுக்கக்கூடும்.
எனவே, நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கல்வி, குடும்பக் கட்டுப்பாடு சேவைகள் மற்றும் பிராந்திய ரீதியிலான உத்திகளின் அடிப்படையில் ஒரு தேசிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
பெண்கள் மேம்பாடு..: இத்தகைய கொள்கை விழிப்புணர்வு, கல்வி மற்றும் தன்னார்வ பங்களிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு சேவைகளுக்கான உலகளாவிய அணுகலை உறுதி செய்யவும், பெண்கள் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.