

புதுடெல்லி: ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை 'திருப்திப்படுத்தும் அரசியலை' தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும், இத்தகைய அரசியல் இனி எடுபடாது என்றும் அமித் ஷா சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 1937ம் ஆண்டின் தீர்மானத்துக்கு இணங்க வந்தே மாதரம் பாடலின் இரண்டு வரிகளை மட்டுமே பாடுவது என அக்கட்சியின் செயற்குழுவில் நேற்று முடிவெடுக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “நேற்று, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ஒரு ஆச்சரியமான; தேசவிரோத முடிவை எடுத்துள்ளது.
1937-ல் தங்கள் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தைப் பின்பற்றி, 'வந்தே மாதரம்' பாடலின் இரண்டு சரணங்களை மட்டுமே பாட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காக, 1937-ல் காங்கிரஸ் கட்சி 'வந்தே மாதரம்' பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது என்பதையும், அதுவே நாட்டின் பிரிவினைக்கு வித்திட்டது என்பதையும், அங்கிருந்துதான் 'இரு தேசக் கோட்பாடு' வலுப்பெற்றது என்பதையும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நான் நினைவூட்ட விரும்புகிறேன். இறுதியில், நாடு பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவானது.
இன்று, 'வந்தே மாதரம்' பாடல் தோன்றி 150 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் அழியாத படைப்பை முழுமையாகப் பாடுவதன் மூலம் அந்த வரலாற்றுத் தவறைச் சரிசெய்யும் முயற்சியும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் அதை முழுமையாகப் பாடுவதற்கான முடிவும் எடுக்கப்பட்டு, அதற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியோ, இதைப் புறக்கணிக்க நேற்று முடிவு செய்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவு, அவர்களின் தீவிரமான 'திருப்திப்படுத்தும் அரசியல்' கொள்கையை உறுதிப்படுத்துகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக, அவர்கள் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் அழியாத படைப்பை அவமதித்தது மட்டுமல்லாமல், 'வந்தே மாதரம்' முழக்கத்தை எழுப்பியவாறே நாட்டின் விடுதலைக்காகத் தூக்குமேடை ஏறிய லட்சக்கணக்கான தியாகிகளையும் அவமதித்துள்ளனர்.
1937-ஆம் ஆண்டு தீர்மானத்தை கடைப்பிடிப்பது என்ற முடிவின் மூலம், இன்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றச் சட்டத்தையே நிராகரிக்கிறது. ராகுல் காந்தியின் தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருமுறை 'திருப்திப்படுத்தும் அரசியலை' தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.