

மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் அருகில் அவர் மகன்
புதுடெல்லி: போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, தனது மகனை போலீஸில் ஒப்படைத்ததாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
பாஜகவின் தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்). சட்டம் மற்றும் நீதித்துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத் விசாரணைக்காக எங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தெலங்கானா போலீஸார் முன்னிலையில் இன்று ஆஜரானார்.
இதை நான் முன்பும் கூறியுள்ளேன்; அது என் சொந்த மகனாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். தன் மீது எந்தத் தவறும் இல்லை என்பதில் எனது மகன் உறுதியாக உள்ளார்.
சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, எங்களிடம் உள்ள ஆதாரங்களை அவர்களிடம் சமர்ப்பித்த பிறகு, இந்த விவகாரத்தை சட்டப்பூர்வ நடைமுறைகளின் மூலம் தகுந்த முறையில் எதிர்கொள்ளலாம் என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதிலும், நீதித்துறையை மதிப்பதிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். நீதிமன்ற நடவடிக்கைகள் தற்பொழுது நிலுவையில் உள்ளதோடு, வரும் நாட்களில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எங்கள் சட்டக் குழுவினர் அறிவுரை வழங்கிய போதிலும், விசாரணைக்கு ஒத்துழைப்பதில் எங்கள் தரப்பில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது என்று நான் கருதினேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீதி வழங்கப்படுவது தாமதமாகலாம், ஆனால் ஒருபோதும் மறுக்கப்படாது. இவ்வாறு மத்திய அமைச்சர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
எனினும், இது சரணடைவு அல்ல என்று மறுத்துள்ள சைபராபாத் போலீஸ் கமிஷனர் எம். ரமேஷ், ஹைதராபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த பகீரத் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”பேத்பஷீராபாத் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பண்டி பகீரத், ஹைதராபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்த கட்ட சட்ட நடைமுறைகளுக்காக அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இது சரணடைவு அல்ல” என்றார்.
ஆனால், தனது மகன் தாமாகவே போலீஸார் முன்னிலையில் ஆஜரானதாகக் குறிப்பிட்ட பண்டி சஞ்சய், பகீரத் விசாரணைக்கு புறப்படும் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.