பிரதமர் வீடியோ நீக்க விவகாரம்: அரசு - மெட்டா 45 நிமிட பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

பிரதமர் வீடியோ நீக்க விவகாரம்: அரசு - மெட்டா 45 நிமிட பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமரின் வீடியோ நீக்க விவகாரம் தொடர்பாக மெட்டா சர்வதேச பிரதிநிதிகள் குழுவுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது.

கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜென்ஸீ இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை ஒட்டி பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டார். ஆனால், அந்த வீடியோ வெகு சில மணித் துளிகளில் மெட்டா தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே அந்த வீடியோ மீட்டெடுக்கப்பட்டது. இது இந்திய அரசு வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் இன்னும் 3 நாட்களுக்குள் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாது பிரதமரிடம் மன்னிப்பு கோராவிட்டால் இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 வழங்கும் மூன்றாம் நபர் (third-party content) வழங்கும் உள்ளடக்கங்களில் இருந்து அளிக்கும் பாதுகாப்பை மெட்டா இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெட்டா தலைமை சர்வதேச விவகாரங்கள் அதிகாரி ஜோயல் கப்லான், மெட்டாவின் துணை தலைவர் நீல் பாட்ஸ், மூத்த இயக்குநர் ரஃபேல் ஃப்ரான்கெல் மற்றும் அதிகாரிகள் அமான் ஜெயின், பிரியா ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று மத்திய அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணனை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது பிரதமர் வீடியோ நீக்க சர்ச்சையுடன், மெட்டா தளங்களில் பொருத்தமற்ற ‘inappropriate’ உள்ளடக்கங்கள் இருப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. சிறாரை மையப்படுத்திய பாலியல் சுரண்டல் உள்ளடக்கங்களை மெட்டா நீக்க வலியுறுத்தப்பட்டது.

சந்திப்பின்போது, பிரதமரின் வீடியோ தவறுதலாகவே நீக்கப்பட்டதன் பின்னணிகளை மெட்டா குழு விரிவாக விளக்கியுள்ளது.

ஆனால், மெட்டா குழுவின் பதிலை ஏற்காத அரசுத் தரப்பு மெட்டா சர்வதேச குழுவுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மெட்டா அல்காரிதமில் என்னவிதமான பாகுபாடுகள் நிலவுகின்றன என்பது குறித்து ஆலோசிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளங்கள் இந்திய அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு தான் இயங்க முடியும். அது கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது ஆகாது என்று இந்திய தரப்பில் மெட்டாவுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மெட்டா தரப்பு அதிகாரிகள், ஆபாச உள்ளடக்கங்களை தடுக்க கடுமையான சட்டதிட்டங்கள், உண்மை கண்டறியும் நடைமுறைகள் உள்ளன. அப்படியிருந்தும் தங்கள் தளம் ஆங்காங்கே தவறாக பயன்படுத்தப்படுவது வேண்டுமென்றே நடப்பதில்லை என்று தெரிவித்தது.

ஏற்கெனவே, இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கம் (Child Sexual Exploitative and Abuse Material) தோன்றுவது தொடர்பாக மெட்டா ஒழுங்குமுறை ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மாதம், இந்த விவகாரம் தொடர்பாக அரசு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வீடியோ நீக்க விவகாரம்: அரசு - மெட்டா 45 நிமிட பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
“மக்களின் எதிர்பார்ப்புகளை தமிழக பட்ஜெட் நிறைவு செய்யவில்லை” - மு.வீரபாண்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in