

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் கர்நாடகாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு தனி விமானம் மூலம் வந்தடைகிறார். காலை 10 மணிக்கு பெங்களூருவை அடுத்துள்ள அனேக்கலில் அமைந்திருக்கும் சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானா மையத்தின் பிரசாந்தி குதிரத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.
பின்னர், பிற்பகல் 12.45 மணிக்கு தாவரக்கெரேவில் இருந்து பெங்களூரு ஐஐஎம் வரையிலான பிங்க் வழித்தட மெட்ரோ சேவையை தொடங்கி வைத்து, அதில் பயணம் மேற்கொள்கிறார். இந்நிகழ்வில், அவருடன் கர்நாடக ஆளுநர் சுதா யாதவ், முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பிற்பகல் 1.15 மணிக்கு பெங்களூருவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர், பெங்களூருவில் இருந்து மங்களூரு வழியாக கோவாவில் உள்ள மடகவுன் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, மைசூரு செல்லும் பிரதமர் மோடி மாலை 3.30 மணிக்கு பாரத் பவனில் நடைபெறும் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு மைசூருவில் கட்டப்பட்டுள்ள காஸ்மோஸ் கோளரங்கை திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.