

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்துடன் மோதல்கள் தொடர்வதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் கூறி இருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் பேசிய வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ள கார்கே, சீனா உடனான இந்தியாவின் தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்புகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலை ராணுவத்துடன் மோதல்கள் தொடர்வதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் உறுதிப்படுத்தி இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.
டோக்லாம் மற்றும் கல்வானுக்குப் பிறகு, மற்றொரு கடுமையான மோதல் அரங்கேறுகிறதா? டாக்ஸிங்குக்கு அருகே சீன ஊடுருவல்கள் நிகழ்ந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, படைத் தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்து 47 நாட்கள் ஆகியும், மோதல்கள் தொடர்கின்றன. அப்படியானால், இந்தியாவின் ரோந்துப் பணிக்கான அணுகல் தடைபட்டுள்ளதா? அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. ஏன் தேசம் இருட்டில் வைக்கப்பட்டுள்ளது?
கல்வான் போரில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததில் இருந்து (2020-21) சீன இறக்குமதிகள் 102 சதவீதம் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 155 சதவீதம் அதிகரித்து 112.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்திய ஏற்றுமதிகளை சீனா தடுக்கிறது என்பதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், அரசாங்கம் சீன முதலீட்டுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தகுதியான சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு பிஎல்ஐ சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. மேக் இன் இந்தியா என்பது சீனாவில் இருந்து இறக்குமதி என்பதாக ஆகிவிட்டதா?
கல்வான் போருக்குப் பிறகு பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே 23 சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்ற 25 சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்புகளும், 36 டபிள்யுஎம்சிசி கூட்டங்களும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் உச்சி மாநாடுகள் ஆகியவையும் நடந்துள்ளன. இந்த சந்திப்புகள் என்ன உறுதியான முடிவுகளைத் தந்துள்ளன? மே 2020-க்கு முந்தைய இந்தியாவின் ரோந்து உரிமைகள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனவா?
நமது படைகள் மீது நமக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், தேசிய பாதுகாப்புக்கு பொறுப்புக்கூறல் தேவை. ராஜதந்திர சந்திப்புகளின்போது நிகழும் ஆரத்தழுவல்களும், அதுதொடர்பான புகைப்படங்களும் அல்ல. எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்துக்கும், தேசத்துக்கும் நம்பிக்கை அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.