

பிரதமர் மோடி
புதுடெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக ஜவஹர்லால் நேரு 4,398 நாட்கள் ஆட்சி செய்தார். ஆனால், பிரதமர் மோடி நேற்றுடன் 4,399 நாட்கள் பதவியில் இருந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். பிரதமராக மோடி தொடர்ந்து தனது 12 ஆண்டு கால ஆட்சியில் பல முக்கிய நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் பிம்பத்தை உலகளவில் மாற்றி அமைத்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமர் பதவியேற்றார். அதன் பின் உடனடியாக ‘ஜன் தன் யோஜனா’ திட்டம் மூலம் குறைந்தபட்ச வைப்புத் தொகை ஏதுமின்றி லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வங்கிகளில் சேமிப்புக் கணக்கு சேவையை தொடங்க செய்தார். தொடர்ந்து ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இத்திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தன. அத்துடன், ஜிஎஸ்டி போன்ற முக்கிய வரிச் சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றியமைத்தன. கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவில் மிக முக்கியமான கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இவற்றில் பல முடிவுகள் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு, பாதுகாப்பு, நலத்திட்டங்கள் மக்களவை நேரடியாகச் சென்றடையும் வழிமுறைகள் ஆகியவற்றை மாற்றி அமைத்துள்ளன.
பாஜகவைப் பொறுத்த வரை, ராமர் கோயில் கட்டுவதைத் தீவிர கொள்கையாக வைத்திருந்தது. இது ஜனவரி 2024-ல் அயோத்தியில் ராமருக்கு ‘பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட்டதன் மூலம் நிறைவேறியது. முஸ்லிம்களின் தவறானப் புரிதலால் செயல்பாட்டில் இருந்த முத்தலாக் நடைமுறைக்கு 2019-ல் தடைவிதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆகஸ்ட் 5, 2019-ல் மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு யுபிஐ சேவை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2016-ல் சிறிய கட்டண சேவை தளமாகத் தொடங்கப்பட்ட யுபிஐ, இன்று இந்தியாவின் சில்லறை வர்த்தகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.
கடந்த 12 ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சி, இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த சகாப்தம், நாட்டின் சம கால வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.