

புதுடெல்லி: ‘‘வெளிநாட்டு பயணத்தைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்’’ என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா - ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இந்தியர்களின் கடின உழைப்பால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் சுதேசி கொள்கைகளை இந்தியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். தேவையில்லாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. வெளிநாடுகளில் திருமணங்களை நடத்தக் கூடாது. தேவையில்லாமல் தங்கத்தை வாங்கக் கூடாது.
நாட்டின் 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற லட்சியத்தை எட்டிப்பிடிக்க வேண்டும். இதற்காக அனைத்து தரப்பு மக்களும் கடினமாக உழைக்க வேண்டும். நாட்டின் 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட்டால் நம்மால் புதிய சிகரங்களை எட்ட முடியும்.
வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க முடியும். சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாமல் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதமும் பிரதமர் மோடி இதுபோன்ற வேண்டுகோளை முன்வைத்தார். இந்தியாவின் தங்க தேவையில் 99% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 2025-26-ம் நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து ரூ.6.4 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் டாலரில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
வெளிநாடுகளிடம் தங்கம், கச்சா எண்ணெய் வாங்கினால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறையும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இதன் காரணமாகவே தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம், பொது போக்குவரத்தைப் பயன்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.