

டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் கடைசி நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துரையாடினர். படம்: பிடிஐ
புதுடெல்லி: ‘‘ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள், அரிய வகை கனிமங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது’’ என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டின் கடைசி நாள் அமர்வு நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. சுமார் 10.35 மணிக்குப் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய மனைவிகள் குழுப் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
காலை 10.50 மணிக்குப் பொது அமர்வு தொடங்கியது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மீள் திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. எந்தவொரு பிரச்சினையும் ஒரு பிராந்தியத்தோடு முடிவது கிடையாது. சிறு பிரச்சினை கூட ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கிறது.
இந்த நேரத்தில் உலகளாவிய சவால்களைப் பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் பெருந்தொற்று தடுப்புத் திட்டம், இயற்கைப் பேரிடர் தடுப்புத் திட்டம், விநியோக சங்கிலி ஒத்துழைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன. பிரிக்ஸ் ஸ்டார்ட் அப் புத்தாக்க நிதியம் உருவாக்கப்பட உள்ளது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பிரிக்ஸ் டிஜிட்டல் வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். எந்தவொரு நாடும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில்நுட்பங்கள், அரிய வகை கனிமங்களை ஆயுதங்களாக பயன்படுத்தக் கூடாது.
அவற்றின் விநியோகத்தைத் தடை செய்யக் கூடாது. தொழில்நுட்பங்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பெண்களின் தொழில் திறன் மேம்பாட்டுக்காகப் ‘பிரிக்ஸ் கனெக்ட்’ திட்டம் செயல்படுத்தப்படும்.
பிரிக்ஸ் நாடுகளின் பெருநகரங்கள் மேம்பாட்டுக்காகச் சிறப்பு அமைப்பு நிறுவப்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்காகப் புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். சிறந்த மின் கட்டமைப்பு, மின்சார சேமிப்புக்காகப் ‘பிரிக்ஸ் டிஜிட்டல் மையம்’ நிறுவப்படும். குளோபல் சவுத் நாடுகளின் வளர்ச்சிக்காகப் பிரிக்ஸ் கூட்டமைப்பு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை வழங்கும். சர்வதேச அரங்கில் குளோபல் சவுத் நாடுகளின் குரல் ஓங்கிஒலிக்க பிரிக்ஸ் துணை நிற்கும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சீனாவில் 48% அரிய கனிமம்: அரிய வகை கனிம வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் சுமார் 48 சதவீத அரிய வகை கனிமங்கள் உள்ளன. மின்சார வாகனங்கள், மின்னணுப் பொருட்கள், ஆயுத உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், தொழில் துறைக்கு இந்த கனிமங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இவற்றை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்க சீனா மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துணிச்சலாகச் சுட்டிக் காட்டினார்.
அரிய வகை கனிமங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், பின்தங்கிய நாடுகளுக்கு முக்கிய தொழில்நுட்பங்களை வழங்க மறுத்து வருகின்றன. இதையும் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் துணிச்சலாகச் சுட்டிக் காட்டினார்.
மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசும்போது, “உலகப் பொருளாதார வளர்ச்சியில் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் 49 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இந்தப் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும். தற்போது ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் பிரிக்ஸ் மீது திரும்பி உள்ளது" என்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் நேற்று அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றனர்.
பிரிக்ஸ் 2-வது நாள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது: உலகம் என்பது ஒரு சாலைக்கு ஒப்பானது. இந்த உலக சாலைக்குச் சிக்னல்கள் (சட்ட விதிகள்) மிகவும் அவசியம். இதற்காக ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றிணைந்து சர்வதேச சட்ட விதிகளை வரையறுக்க வேண்டும். இதையே குளோபல் சவுத்நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
நாடுகளுக்கு இடையிலான போர்கள், மோதல்களுக்குச் சர்வதேச சட்ட விதிகளின்படி சுமுக தீர்வை எட்ட வேண்டும். ஐ.நா. சபையின் அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பு சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இதற்காகப் பிரிக்ஸ் ஏஐ மையம் உருவாக்க வேண்டும். பிரிக்ஸ் நாடுகளின் தொழில் துறைகளை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க சீனா தயாராக உள்ளது. இவ்வாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசினார்.