கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன? - ஜப்பான் பிரதமர் முன்னிலையில் பிரதமர் மோடி விவரிப்பு

கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன? - ஜப்பான் பிரதமர் முன்னிலையில் பிரதமர் மோடி விவரிப்பு
Updated on
2 min read

புதுடெல்லி: இந்திய - ஜப்பான் உறவு உண்மையில் மிகவும் சிறப்பானது என்றும், அது இரு நாடுகளுக்கு இடையே வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டில் மட்டும் ரூ.95,245 கோடி ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக பிரதமர் தகாய்ச்சி முதன்முறையாக இ்நதியா வந்துள்ளார். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு ஜி7 உச்சி மாநாட்டில், இன்றைய உலகளாவிய கொந்தளிப்பான சூழலில் பரஸ்பர நம்பிக்கையே நமது மிகப் பெரிய சொத்து என்று நான் கூறினேன். இந்தியா - ஜப்பான் இடையேயான கூட்டுறவு இந்த நம்பிக்கையை முழுமையாக பூர்த்தி செய்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

கடந்த பல பத்தாண்டுகளாக வாகனத் துறை முதல் மின்னணுவியல் வரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து, விலைமதிப்பற்ற நட்புறவையும் நம்பிக்கை பிணைப்பையும் உருவாக்கி உள்ளது.

இன்று, பிரதமர் தகாய்ச்சியின் வருகையின் மூலம் நமது சிறப்பு இருதரப்பு உறவு ஒரு புதிய அத்தியாத்தை தொடங்குகிறது. இன்று இந்தியாவும் ஜப்பானும் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.

செழிப்பான, விதிகள் அடிப்படையிலான இந்தோ - பசிபிக் பிராந்தியம் நமது பொதுவான முன்னுரிமையாகும். இந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய ஜனநாயக மற்றும் பொருளாதாரங்களாக நாம் பல முக்கிய முன்னெடுப்புகளை இன்று எடுத்துள்ளோம். நாம் ஒன்றிணைந்து இந்த பிராந்தியம் முழுவதிலும் அமைதி, நிலைத்தன்மை, முன்னேற்றத்துக்கு வழிவகுப்போம்.

தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்படுவது நமது ஒத்துழைப்பின் மிக வலிமையான தூணாக மாறும் என்று பிரதமர் தகாய்ச்சியும் நானும் நம்புகிறோம். இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இன்று செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

இந்திய செயற்கை நுண்ணறிவுச் சூழலமைப்பில் உள்ள பல முன்னணி நிறுவனங்களும் ஜப்பானிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பானின் துல்லியமான தொழில்நுட்பமும் இந்தியாவின் மென்பொருள் திறன்களும் இணைவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தையும் வலிமையையும் அளிக்கும்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முதல் கூட்டு மேம்பாட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் இன்று நாம் கையெழுத்திட்டுள்ளோம். இந்த கடற்படை வானொலி ஆண்டெனா திட்டம் நமது பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். பிராந்திய அமைதி, கடல்சார் பாதுகாப்பு, விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை வலுப்படுத்தும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை நாம் இனி கூட்டாக உருவாக்குவோம்.

மருந்து, மருத்துவச் சாதனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகளில் இன்று கையழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்புக்கும் நாம் பங்களிப்போம். இந்தியாவின் அளவையும் ஜப்பானின் தரத்தையும் இணைப்பதன் மூலம் உலகிற்கு மலிவான, நம்பகமான, மேம்பட்ட சுகாதாரத் தீர்வுகளை வழங்க நாம் பணியாற்றுவோம்.

இந்தியாவும், ஜப்பானும் இணைந்து முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன. கடந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம், 10 பில்லியன் டாலருக்கும் அதிமான ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது.

நிதிச் சேவை நிறுவனங்களுக்கு இடையேயான இன்றைய ஒப்பந்தம், மூலதனம் மற்றும் முதலீட்டுப் பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கும். நமது இலக்கு தெளிவாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு 10 ட்ரில்லியன் யென் முதலீட்டை அடைவதும், இந்தியாவில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதும் ஆகும். இந்தியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள் வணிகம் செய்வதை எளிதாக்கி உள்ளன. இதனால், ஜப்பானிய நிறுவனங்கள் பயனடையலாம்.

எரிசக்திப் பாதுகாப்புத் துறையிலும் இன்று நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இந்தியா - ஜப்பான் உயிரி வாயு முன்முயற்சியின் மூலம் இந்தியாவில் 1,000 உயிரிவாயு மற்றும் இயற்கை உர ஆலைகளை நிறுவுவதற்கு நாம் ஆதரவு அளிப்போம். இது நமது கிராமங்களில் செழிப்பையும், வாழ்வாதாரங்களுக்கு புதிய உத்வேகத்தையும் அளிக்கும். எண்ணெய் நெருக்கடிகள் போன்ற சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்காக எரிசக்தி மீள்திறன் குறித்த ஒரு முக்கிய முன்முயற்சியையும் நாம் தொடங்கியுள்ளோம். மின்கலன்கள், பசுமை ஹைட்ரஜன், அணுசக்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு உலகின் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.

அடுத்த ஆண்டு இந்தியா - ஜப்பான் தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாட இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த முக்கியமான தருணத்தில் கலாச்சாரம், சுற்றுலா, பொருளாதாரம் ஆகிய துறைகளில் நமது ஒத்துழைப்பை இணைந்து ஆழப்படுத்துவோம். இந்தியா மற்றும் ஜப்பானின் பொருளாதாரங்கள் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. கலாச்சார விழுமியங்கள் முதல் நவீன தொழில்நுட்பங்கள் வரை நாம் ஒரு பொதுவான பார்வையையும் அணுகுமுறையையும் கொண்டுள்ளோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நமது உறவு அசைக்க முடியாத பரஸ்பர நம்பிக்கையின் மீது நிறுவப்பட்டுள்ளது. இது, வலிமையான, செழிப்பான ஜப்பான் குறித்த உங்களின்(தகாய்ச்சி) தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து வளர்த்து மேம்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கையெழுத்தான ஒப்பந்தங்கள் என்னென்ன? - ஜப்பான் பிரதமர் முன்னிலையில் பிரதமர் மோடி விவரிப்பு
“முதல்வர் விஜய் ஜூலை 10-ம் தேதி கரூர் செல்கிறார்” - அமைச்சர் ஆனந்த்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in